'விஜய் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது; உளவுத்துறைக்கு இதுதான் வேலையா?' - அண்ணாமலை கேள்வி!
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரு மனிதர் தன்னுடைய பொறுப்புக்கு தகுந்த வகையில் பேச வேண்டும். உதயநிதியின் நடவடிக்கையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி இந்தி தெரியாது போடா என்று கூறியவர்.
அவருக்கு அமித் ஷா பேசியதில் என்ன புரிந்தது. காங்கிரஸ் அம்பேத்கருக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. அதைத்தான் அமித் ஷா அம்பலப்படுத்தினார். 35 திமுக அமைச்சர் பட்டியலில் ஏன் பட்டியலினத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அல் உமா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம். பாஷா ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. கோவை அமைதியாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லையா. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தால் கோவை உள்பட கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் தடைபட்டது.
குண்டுவெடிப்பு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் பெங்களூரு, புனே போல கோவையும் ஐடி ஹப்பாக மாறியிருக்கும். அவரது மத முறைப்படி இறுதி நிகழ்வுகள் நடப்பதை எதிர்க்கவில்லை. ஆனால், நாட்டையே உலுக்கிய சம்பவத்துக்கு காரணமான ஒருவருக்கு இறுதி ஊர்வலம் நடக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விஜய் கடந்த வாரம் கோவாவில் ஒரு திருமணத்துக்கு சென்றார். அவரின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது. அவர் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவரின் தனிப்பட்ட விருப்பம். அந்தப் போட்டோவை வெளியிட்டது யார். இதுதொடர்பாக பாஜக சார்பில் விமான போக்குவரத்து அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பவுள்ளோம். வருகிறவர்கள், போகிறவர்களை போட்டோ எடுப்பது தான் மாநில உளவுத்துறையின் வேலையா.
போட்டோ எடுத்து அதை திமுக ஐடி விங்குக்கு கொடுக்கும் வேலையை தான் செய்கிறார்களா. ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. யார் போட்டோ எடுத்து, யாருக்கு அனுப்பினார்கள் என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் அரசியலை கவனிக்க வேண்டும்.” என்றார்.