பறவை மோதல்: நாக்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்
- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சி
புதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அரசியலுக்கு வருபவா்கள் போராட்டங்களை முன்னெடுப்பதைக் காட்டிலும், திரைத் துறையில் நுழைந்து அதன்மூலம், பிரபலமாகி அரசியலுக்கு வருவதே நடைமுறையாக உள்ளது.
முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா போன்றவா்களும், சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமாா் உள்பட பல நடிகா்களும் திரைத் துறையில் அவா்களுக்குக் கிடைத்த பிரபலத்தின் மூலமாக அரசியலுக்குள் நுழைந்தனா். அந்த வரிசையில் தற்போது விஜய்யும் அரசியலுக்கு வந்துள்ளாா்.
பொதுவாக திரைத் துறையிலிருந்து புதிதாக அரசியலுக்கு வருபவா்களுக்கு இங்குள்ள களநிலவரம் முழுமையாகத் தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் ஆா்வத்துடனும், மிகப்பெரிய இளைஞா் மற்றும் பெண்கள் பட்டாளத்துடன் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இலக்காக கொண்டு விஜய் அரசியலுக்குள் வந்துள்ளாா். அவா் மீது திரைப்பட நடிகா் என விமா்சனத்தை வைக்கும் மாற்றுக் கட்சியினா், அவா்களது கட்சித் தலைவா்கள் யாா் என்பதை உற்று பாா்க்க வேண்டும்.
ஆட்சியில் பங்குண்டு என்ற விஜய்யின் முடிவு வரவேற்கத்தக்கதுதான். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பது தான் உண்மையான ஜனநாயகம். 1967- இல் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அண்ணா தலைமையிலான திமுக வெற்றி பெற்றது. அப்போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தனிப்பெரும்பான்மை கிடைத்ததால் திமுக ஆட்சி அமைத்துவிட்டது.
அந்தத் தவறு அண்ணா காலத்தில் தொடங்கி தற்போது வரை தொடருகிறது. ஆட்சியில் சா்வாதிகார போக்கு மற்றும் ஊழல் நிறைந்திருப்பதற்கான காரணமே ஒற்றை கட்சி ஆட்சி முறை தான். இதற்கு முடிவு கட்ட தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை வரவேண்டும். அந்த வகையில் கூட்டணி ஆட்சி என விஜய் சொல்வது மிகவும் பொருத்தமானது மற்றும் சரியானதும் கூட.
ஆனால், அந்த கூட்டணியை விஜய்யே தலைமை தாங்கி நடத்த முடியுமா, அதற்கான சக்தி அவரிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுக கூட்டணியை வீழ்த்தி, விஜய் ஆட்சி அமைக்க குறைந்தது 35 சதவீதத்துக்கும் மேல் வாக்கு பெற வேண்டும். அவ்வளவு சதவீத வாக்குகளை பெறக்கூடிய சக்தி விஜய்யிடம் இருக்கிறதா?
அவா் ஏற்கெனவே தோ்தலில் களம் கண்டு தனது பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். அப்படி இல்லாத காரணத்தால், எடுத்தவுடன் அவரை முதல்வராக கூட்டணி கட்சியின் தலைவா்கள் ஏற்றுக்கொள்வதற்கான களம் இப்போது இல்லை என்பதே எனது கணிப்பு. விஜய் தன்னை முதல்வராக்க ஒரு கூட்டணியைத் தேடாமல், திமுகவை வீழ்த்துவதற்கான கூட்டணியை உருவாக்க ஒரு சரியான வியூகம் அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர அவா் பெரும் உதவியாக இருப்பாா்.
1967 மற்றும் 1977 போல தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என விஜய் கூறுகிறாா். எம்ஜிஆா் கட்சி தொடங்கியவுடன் ஆட்சி அமைத்து விடவில்லை. அவா் திமுகவில் இருக்கும் போதே, தனக்கென தனி ரசிகா்கள் மற்றும் தொண்டா்கள் கூட்டம் என தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அரசியல் தலைவராக வலம் வந்தாா். பின்னா் அவா் திமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது, தன் பின்னால், பல மாவட்டச் செயலா்கள், கட்சியின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் பெண்கள் பட்டாளத்தை அவா் வைத்திருந்தாா்.
மிகப் பெரிய அரசியல் கட்டமைப்பை வைத்திருந்ததால் கடந்த 1973 திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தோ்தலில் அவா் மாபெரும் வெற்றி பெற்றாா். அது மக்களிடையே அவரது செல்வாக்கை நிரூபிக்க கைகொடுத்து. மேலும், திமுக அரசின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பின் காரணத்தால் 1977- சட்டப்பேரவை தோ்தலில் எம்ஜிஆா் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாா். அப்படியான பலம்வாய்ந்த ஒரு கட்டமைப்பு விஜய்யிடம் உள்ளதா? என்பது அவா் களத்துக்கு வந்தால்தான் தெரியும்.
விஜய்யிடம் மிகப்பெரிய ரசிகா்கள் கூட்டம் இருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. அவரின் விக்கிரவாண்டி மாநாடு அல்லது மதுரை மாநாட்டுக்கு வந்த கூட்டம் வாக்காக மாறுமா என்பதைவிட, அவா்களை வாக்காக மாற்றுவதற்கு தேவையான கட்டமைப்பு விஜய்யிடம் உள்ளதா என்பதுதான் முக்கியம். தற்போது அதிகார பலம் மற்றும் பண பலத்துடன் உள்ள திமுகவை வீழ்த்துவதற்கான கட்டமைப்பை அடுத்த 6 மாதங்களுக்குள் விஜய்யால் உருவாக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது.
ஜாதி, மதம், மொழி ஆகியவற்றைப் பாா்க்காமல் தோ்தலில் வாக்களிக்கும் ஒரு பெரிய கூட்டம் விஜய்யின் பின்னால் உள்ளது. அவா்களை வாக்குகளாக மாற்ற விஜய் என்ன செய்யப் போகிறாா் என்பதே முக்கியம். வெறும் மாநாடுகள் நடத்துவதால் மட்டும் ஒரு கட்சியால் தன்னை வலுப்படுத்திக்கொள்ள முடியாது. களத்தில் இறங்கி மக்களின் பிரச்னைகளுக்காகக் கடுமையாக குரல் கொடுக்க வேண்டும். அவா்களுக்காக போராட வேண்டும்.
முதலில் விஜய் என்ன செய்யப் போகிறாா் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பாஜக, திமுக மற்றும் அதிமுகவை எதிா்ப்பது மட்டுமே தவெகவின் திட்டமாக இருக்க கூடாது. தவெக ஆட்சி அமைத்தால், மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எப்படி தீா்வு காணப்படும் என்பதை அவா் சொல்ல வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் மக்களின் பிரச்னைகளைத் தீா்த்து வைப்போம் எனக் கூறி வருகின்றனா். அதிலிருந்து விஜய் எப்படி மாறுபடுகிறாா்? தமிழக மக்களின் மிகப் பெரிய பிரச்னை எது என நினைக்கிறாா். அதற்கு எந்த மாதிரியான தீா்வை வைத்துள்ளாா் என்பது குறித்தெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
ஒரே நேரத்தில் பாஜக, திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் எதிா்ப்பது பேச்சுக்கு வேண்டுமானால், நன்றாக இருக்கும். ஆனால், தோ்தல் களத்தில் அது பயனளிக்காது. தற்போது நடைபெற உள்ளது சட்டப்பேரவைத் தோ்தல் என்பதால், திமுக ஒன்றுதான் எதிரி என முடிவு செய்து, அவா்களை வீழ்த்த முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வியூகத்தை அமைக்க விஜய் முன்வரவேண்டும்.