விடுதலை 2: ``8 நிமிஷம் குறைச்சிருக்கோம்'' - கடைசி நேரத்தில் வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ
வெற்றிமாறம் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஶ்ரீ, மஞ்சு வாரியர், கௌதம் மேனன் ராஜிவ் மேனன், கிஷோர், சேத்தன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் விடுதலை 2.
நாளை (டிசம்பர் 20ம் தேதி) வெளியாகவுள்ள இந்த படத்தின் முழுமையான காட்சிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. கடைசி நேரம் வரை படத்திற்கான எடிட்டிங் வேலை நடந்ததாகவும், இறுதியாக 8 நிமிட காட்சிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் வேலையை முடித்துவிட்டு களைப்பான முகத்துடன் பேசியுள்ளார் வெற்றிமாறன்.
அவர், "விடுதலை பார்ட் 2 வேலைகள் இப்போதுதான் முடிந்தன. மிக நீண்ட, சோர்வளிக்கக்கூடிய வேலை. ரிலீசாவதற்கு முன்னர் நீளத்தைக் குறைக்க வேண்டுமென குறைத்திருக்கிறோம்.
படத்தில் வேலை செய்த அனைவருக்கும் இது மிகப்பெரிய கல்வி. இந்த பயணமே மிகப் பெரிய பயணம். இந்த பயணித்தில் இருந்த எல்லாருடைய பங்களிப்பும்தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்தமாதிரி ஒரு படத்திற்கு உடனிருந்து ஆதரவளித்த எல்லாருக்கும் எங்கள் குழுசார்பாக நன்றி. ஒரு படமாக இது எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்கள்தான் சொல்லவேண்டும். அனுபவமாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். கடினமாக உழைத்திருக்கிறோம்" எனப் பேசினார்.
விடுதலை 2 படத்துக்கு வயது வந்தோர் மட்டுமே பார்க்கக்கூடிய ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான அரசியல் பேசப்படுகிறது என்பதை முதல் பாகத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
முதல் பாகத்தில் சிறிது நேரமே தோன்றிய விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் நீண்ட நேரம் தோன்றுகிறார் என்பதை ட்ரெய்லரில் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். யுகபாரதியின் வரிகளில் வெளியான பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியிருக்கின்றன. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்தபடத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகுந்திருக்கிறது.