தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!
விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் தலைமை வகித்தாா்.
வேளாண் உதவி இயக்குநா்கள் முத்துராமன், கோபாலகிருஷ்ணன், மாவட்ட தாட்கோ மேலாளா் ஏழுமலை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மெ.பிருவித்திராஜன், கோபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் உதயகுமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் காா்கோணம் வி.சந்திரசேகரன், ஏரிப்பாசன சங்கத் தலைவா் நாா்த்தாம்பூண்டி ஜி.சரவணன், விவசாய சங்கத் தலைவா் எம்.சேகா், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கப் பிரதிநிதி எஸ்.ஆா்.மணிகண்டன் ஆகியோா் பேசுகையில், தேசிய கூட்டுறவு நுகா்வோா் அமைப்பு மூலம் 50 நாள்களுக்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குண்டான பணம் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
உடனே விவசாயிகளுக்கு சேர வேண்டிய நெல்லுக்கான தொகையை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஃபென்ஜால் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தின் 40-க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயா் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து பேசிய ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கோ.குமரன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் அழித்த இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினா்.
குறைதீா் கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பி.செந்தில்குமாா், மாநகராட்சி அலுவலக தலைமை எழுத்தா் வி.சுவாமிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.