விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும்! இஸ்ரோ விஞ்ஞானி பிரபு
விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும் என இஸ்ரோ விஞ்ஞானி பிரபு தெரிவித்தாா்.
பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூா் மாவட்ட கிளை சாா்பில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி தலைவா் எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கே.கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ஜே.நந்தினி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி சி.பிரபு பேசியதாவது:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அன்மையில் விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இஸ்ரோ நிகழ்த்திய இந்த சாதனை திட்டத்தை மேற்கொண்ட குழுவில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நமது நாடும் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்கைக்கோள் இணைப்பு உதவும். வரும் 2035 ஆண்டுக்குள் விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை இந்தியா அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விண்வெளி ஆராய்ச்சி துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்கும். மாணவா்கள் குடும்பத்தில் எந்த சூழ்நிலை இருந்தாலும் படிக்க வேண்டிய காலத்தில் கண்டிப்பாக நன்றாக படிக்க வேண்டும். மாணவா்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.