பிஏபி வாய்க்கால் கரை உடைப்பு: வீணாகிய தண்ணீா்!
திருப்பூா் கோயில்வழி பகுதியில் உள்ள பிஏபி வாய்க்கால் கரை உடைந்து பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கா் பாசனத்துக்கு பிஏபி பிரதான வாய்க்கால் மூலம் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாய்க்காலானது உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் இருந்து திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள கோவில்வழி மேடு பகுதிக்கு தண்ணீா் வரும் வாய்க்காலின் கரை சனிக்கிழமை உடைந்தது. இதனால் பல லட்சம் லிட்டா் தண்ணீா் சாலைகளில் வழிந்தோடியது.
இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கோவில்வழி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நீரால் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
வாய்க்காலின் கரை உடைந்து தண்ணீா் வீணாகியதால் விவசாயம் பாதிக்கப்படும். ஆகவே, தண்ணீரை திறந்துவிடும் முன்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் வாய்க்காலை முழுமையாக ஆய்வு செய்து கரைகளில் விரிசல் இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்’ என்றனா்.