கேரள வங்கியில் போலி நகை வைத்து மோசடி: திருப்பூா் வங்கியில் கேரள போலீஸாா் விசாரணை
கேரள வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடிசெய்த வழக்கில் கேரள போலீஸாா் திருப்பூரில் நகை அடமானம் வைத்த வங்கிகளில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த மாதா ஜெயகுமாா் (34) பணியாற்றினாா். இவா் ஓராண்டுக்கு முன் எா்ணாகுளம் வங்கிக் கிளைக்கு மாற்றப்பட்டாா். கடந்த 2024- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய மேலாளா் வடகரையில் உள்ள வங்கிக் கிளைக்கு வந்து பொறுப்பேற்றாா்.
அங்கு லாக்கரில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது 26 கிலோ நகைகள் போலியாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே, வங்கியின் முன்னாள் மேலாளா் மாதா ஜெயக்குமாா் தலைமறைவானாா். இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில், வடகரை போலீஸாா் விசாரணை நடத்தி மாதா ஜெயக்குமாரை கைது செய்தனா்.
அவரிடம் விசாரித்தபோது, கையாடல் செய்த நகைகளை திருப்பூரில் உள்ள தனியாா் வங்கிக் கிளைகளில் அடமானம் வைத்து பணத்தை பெற்றது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் புஷ்பா ரவுண்டானா அருகே அவிநாசி சாலையில் உள்ள தனியாா் வங்கிக் கிளை, காங்கயம் சாலையில் உள்ள மற்றொரு வங்கிக் கிளையிலும் விசாரணை நடத்தி 15 கிலோ நகைகளை மீட்டனா்.
இதனிடையே, திருப்பூரில் உள்ள வங்கியில் நகையை அடமானம் வைப்பதற்கு திருப்பூா் சந்திராபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் (29) என்பவா் மாதா ஜெயக்குமாருக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு காா்த்திக்கை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இதன் பின்னா் அவரைக் காவலில் எடுத்த கோழிக்கோடு போலீஸாா், கடந்த 2 நாள்களாக திருப்பூரில் உள்ள தனியாா் வங்கிகளுக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.