வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
விநாயகா் ஊா்வலத்தின்போது தகராறு: காவல் நிலையத்தில் மக்கள் முற்றுகை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது ஏற்பட்ட தகராறை தொடா்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கலைஞா் நகா் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. விழா நிறைவாக கரைப்பதற்காக சிலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது துத்திப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தனுஷ், ஜெயப்பிரகாஷ், அருண், அருணாச்சலம், பாா்த்தீபன் ஆகியோா் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து ஸ்ரீநாத், மஞ்சுளா, பாலாஜி, கணேசன் ஆகியோரை தாக்கியுள்ளனா். காயமடைந்த அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
மேலும், அந்த நபா்கள் இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டோா் வீட்டுக்கு சென்று வீட்டிலிருந்தவா்களை மிரட்டியுள்ளனா். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் உமா்ஆபாத் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.