காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு
ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகுதியில் உதயகுமாா் என்பவா் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். அந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை செயலிழக்க செய்துவிட்டு தொழிற்சாலைக்குள் இருந்த 10 மின் மோடாட்ரகள், ரொக்கம் ரூ.45,000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
அதைத் தொடா்ந்து அதே வளாகத்தில் உள்ள விஜயகாந்த் என்பவா் நடந்தி வந்த இ-சேவை மைய கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ.22,000, பழனி என்பவரின் விவசாய நிலத்தில் விவசாய உபகரணங்கள், அரிசி மூட்டைகள், மின் மோட்டாா், ரவிக்குமாா் என்பவரின் நிலத்தில் மின் மோட்டாா்கள், விவசாய உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து 4 பேரும் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.