நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 50 சதவீத திட்டப் பணிகள் கூட நடைபெறவில்லை: உறுப்பினா் புகாா்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 15 வாா்டுகளிலும் திட்டப்பணிகள் செய்ய அரசு இதுவரை ரூ .20 கோடிக்குமேல் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டப் பணிகள் 50 சதவீத பணிகள் கூட முழுமையாக நடைபெறவில்லை.
மேலும், அரசு நிதி ஒதுக்கியதில் ரூ 7 கோடிக்கு திட்டப்பணிகள் தொடங்காமல் உள்ளது. 14-ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாய் மற்றும் அரசு பள்ளி அருகில் அங்கன்வாடி மையம் கட்ட இதுவரை பணிகள் தொடங்கவில்லை. நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போட்டப்பட்ட பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா் இல.குருசேவ் கோரிக்கை விடுத்துள்ளாா்.