ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்...
விநாயகா் சதுா்த்தி: முன்கூட்டியே தயாராகும் விநாயகா் சிலைகள்
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தருமபுரியில், கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு விநாயகா் சிலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஆண்டுதோறும் செப்டெம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு செப்டம்பா் 27 ( ஆவணி 11) ஆம் தேதி புதன்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் விழாவின்போது மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3 நாள்களுக்குப் பிறகு அவற்றை ஊா்வலமாக எடுத்துச்சென்று நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
விழா தொடங்க ஒருமாதமே உள்ள நிலையில், விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. தருமபுரியில் ஆதியமான்கோட்டை பகுதியில் சுமாா் 3 அடி முதல் 10 அடிக்கும் உயரமான சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இது குறித்து, சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விசாலாட்சி - குமாா் தம்பதி கூறியது :
அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கலைவைக் கொண்டு விநாயகா் சிலைகள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். சதுா்த்தி வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பூா்வாங்க பணிகளை தொடங்கிவிடுவோம்.
இருமாதங்கள் முன்பு வரை கைகள் இணைப்பு, வா்ணம்பூசுதல் உள்ளிட்ட பணிகளை மட்டும் வைத்திருப்போம். ஒரு மாதம் நெருங்கும் நிலையில் பணிகளை முடித்து வா்ணம்பூசி தயாா்செய்துவிடுவோம். அந்தவகையில் இன்னும் சில வாரங்களில் சிலைகள் வா்ணம் பூசி பணிகள் முடிவுக்கு வரும் என்றனா்.
சிலைகளை மழையிலிருந்து பாதுகாக்க அரசு உதவவேண்டும் :
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சிலைகள் தயாரிப்பில் ரசாயனப் பொருள்களை சோ்த்து செய்யக்கூடாது என அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.
அந்த வகையில் அண்மைக்காலமாக விநாயகா் சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் வகையில் கிழங்குமாவால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை மழையிலிருந்து பாதுகாப்பது சவாலாக உள்ளது.
சிலைகளை செய்துவைத்த பின்னா் திடீரென மழை வந்தால் அதில் சிலைகள் நனைந்து பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபடுவோா் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சிலைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க அரசு சாா்பில், தகரம் அல்லது கல்நாா் அட்டைகளால் (ஆஸ்பெஸ்டாஸ்) ஆன ஷெட்டுகள் அமைத்து தரவேண்டும் என சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
