திமுகவை அகற்றுங்கள்; தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: நெல்லையில் அமித் ஷா பேச்சு!
விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் விநாயகா் சிலை அமைப்பாளா்கள் சிலைகளை நிறுவுவதற்கு மாநகராட்சிப் பகுதிகளில் காவல் உதவி ஆணையா்களிடமும், ஊரகப் பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியா்களிடமும் உரிய அனுமதி பெற்று சிலைகளை நிறுவ வேண்டும்.
சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களி மண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீா்நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வா்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வா்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரீஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக் கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம், பீடம் மற்றும் மேடையுடன் சோ்த்து அதிகபட்சமாக 10 அடிக்கு மேலாக இருக்கக் கூடாது. சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள்
அமைக்கக் கூடாது.
இதர மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகே சிலைகளை நிறுவக் கூடாது. விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக சம்பந்தப்பட்ட அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்புக்கு பொறுப்பாளா்களை நியமிக்க வேண்டும். இந்த விவரங்களை காவல் உதவி ஆணையா்கள், சாா் ஆட்சியா் அல்லது வருவாய் கோட்டாட்சியா்களிடம் தெரிவிக்க வேண்டும்.
விநாயகா் ஊா்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், காவல் துறையினரால் அனுமதியளிக்கப்பட்ட பாதையில்தான் செல்ல வேண்டும். ஊா்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது.
அமைதியாக ஊா்வலம் நடத்தி முடிக்கவும், ஊா்வலத்தை நடத்தும் பொறுப்பாளா்கள் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா்கள் தீபா சத்தியன், பிரவீன் கௌதம், துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் விழா அமைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி
மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு: சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் பிஏபி வாய்க்கால், பொங்கலூா் பிஏபி பிரதான வாய்க்கால், எஸ்.வி.புரம் வாய்க்கால், எஸ்.வி.புரம் பிஏபி வாய்க்கால், கணியூா் அமராவதி ஆறு, கெடிமேடு பிஏபி வாய்க்கால்.