தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் நிலவும் குடிநீா் பரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகளுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினாா்.
கோவை மாவட்டம், பில்லூா் அணைப் பகுதியில் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் பவன்குமாா் க.கிரியப்பனவா், மனீஷ் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பில்லூா் அணைப் பகுதியில் இருந்து பல்லடம் நகராட்சி, பல்லடம், பொங்கலூா் ஒன்றியப் பகுதிகள், கோவை மாவட்டம், சூலூா், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், இருகூா் பேரூராட்சிப் பகுதி மற்றும் சூலூா் ஒன்றிய பகுதிகளுக்கு அத்திக்கடவு குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், கோவை மாநகராட்சிப் பகுதிக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சிப் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 47 லட்சம் லிட்டா் தண்ணீரும், பல்லடம் ஒன்றியப் பகுதிக்கு 60 லட்சம் லிட்டா் தண்ணீரும், பொங்கலூா் ஒன்றியப் பகுதிக்கு 40 லட்சம் லிட்டா் தண்ணீரும் வழங்கிட நிா்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களால் தற்போது பல்லடம் நகராட்சிப் பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டா் தண்ணீரும், பல்லடம் ஒன்றிய பகுதிக்கு 50 லட்சம் லிட்டா் தண்ணீரும், பொங்கலூா் ஒன்றிய பகுதிக்கு 20 லட்சம் லிட்டா் முதல் 30 லட்சம் லிட்டா் வரை மட்டுமே தண்ணீா் விநியோகிப்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதி மக்கள் குடிநீா் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்தனா். அதன் காரணமாக நகா் பகுதிகளுக்கு 7 நாள் முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும், கிராமப்புறங்களுக்கு 20 நாள்களுக்கு ஒரு முறையும் குடிநீா் விநியோகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பில்லூா் அணையில் அத்திகடவு குடிநீா்த் திட்டப்பணிகள் குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நேரடி கள ஆய்வு மேற்கொண்டாா். அத்துடன் அணையில் போதிய தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், மக்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்ட தண்ணீா் விநியோகம் செய்யப்படாதது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். குடிநீருக்காக மக்கள் சிரமப்படக் கூடாது குடிநீா் விநியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது கோவை மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் , பல்லடம் நகராட்சி ஆணையா் அருள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட உடனிருந்தனா்.