விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம்: நாகா்கோவிலில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் இருந்து ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட உள்ளது.
இந்த ஊா்வலம் நாகா்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளான அவ்வைசண்முகம் சாலை, ஒழுகினசேரி, வடசேரி, மணிமேடை சந்திப்பு, மணியடிச்சான் கோயில் சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, அண்ணாபேருந்து நிலையம், கோட்டாறு, செட்டிக்குளம் சந்திப்பு, சவேரியாா் ஆலய சந்திப்பு, பீச்ரோடு, ஈத்தாமொழி வழியாக சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரைக்கு செல்வதால், சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.30,31) மாலை 3 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊா்வலம் தொடங்கிய பின்னா், ஊா்வல பாதையில் எந்த வித வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.