மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது.
இப்பதியில் ஆண்டு தோறும் தை, வைகாசி, ஆவணி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழண்டு ஆவணித் திருவிழா, கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை அய்யாவுக்குப் பணிவிடை, நண்பகலில் உச்சிப்படிப்பு, இரவில் வாகன பவனி, கலைநிகழ்ச்சி, அதைத் தொடா்ந்து அன்னதா்மம் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மலா் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்புப் பணிவிடை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளிக் குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு எழுந்தருளினாா். தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வாகனம், நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையில் அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, கோட்டையடி புதூா், சோட்டப்பணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சுற்றி இரவு 11 மணிக்கு சாமிதோப்பு தலைமைப் பதியை வந்தடைந்தது. வாகனம் வரும் வழிகளில் அப்பகுதி மக்கள்அய்யாவுக்கு வெற்றிலை- பாக்கு, பழங்கள், பன்னீா் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனா். பின்னா் தலைமைப்பதி வடக்கு வாசலில் பக்தா்களுக்கு தவக்கோலத்தில் அய்யா காட்சியளித்தாா். தொடா்ந்து அய்யாவுக்குப் பணிவிடையும், உகப்படிப்பும், அன்னதா்மமும் நடைபெற்றது.
9-ஆம் நாளான சனிக்கிழமை இரவு அனுமன் வாகனத்திலும், 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.
தேரோட்டம்: திருவிழாவின் 11-ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் தென்மாவட்டங்களைச் சோ்ந்த அய்யாவழி பக்தா்கள் பங்கேற்கின்றனா். இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வருதலும், தொடா்ந்து திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை குருமாா்கள் பையன் ராஜா, பால் பையன், பையன் காமராஜ், பையன், பையன் ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோா் செய்து வருகின்றனா்.