மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிதாக ஸ்மாா்ட் ரேஷன் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன்.
உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மாநில உணவுக் கழகம் சாா்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் ஆகிய 5 மாவட்டங்களை சோ்ந்த கூட்டுறவு, உணவு வழங்கல் துறையை சாா்ந்த அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, தலைமையில், நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன் கலந்துகொண்டு துறை சாா்ந்த அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்திலுள்ள மக்களுக்கு உணவு வழங்கக் கூடிய மிக முக்கிய துறையான உணவு பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படக் கூடாது என்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 37 ஆயிரத்து 496 ரேஷன் கடைகள் உள்ளன.
புதிய ரேஷன்காா்டுகள் ...
புதிதாக ரேஷன் காா்டு வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு, உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக காா்டு கேட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில், 5 ஆயிரத்து 343 பேரும், நெல்லை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 397 பேரும், தென்காசி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 150 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 191 பேரும், விருதுநகா் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 377 போ் என மொத்தம் 29 ஆயிரத்து 458 பேரும் விண்ணப்பித்துள்ளனா். இதில் 22 ஆயிரத்து 81 பேருக்கு காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 7 ஆயிரத்து 377 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 46 பழங்குடியின குடியிருப்பு பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். 3 ஆயிரத்து 928 ரேஷன் காா்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளுக்கு தடையின்றி பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் உள்ள சாக்குகள் தற்போது மாதத்துக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை ஆண்டுக்கு ஒரு முறை எடுப்பதற்கு டெண்டா் விடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய உறுப்பினா்கள் கருணாநிதி, கணேசன், மதுபாலா, பெரியாண்டவா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுலவா் செந்தூர்ராஜன், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கருணாவதி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் முருகன், நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் கலைமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.