விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 3.05 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3.05 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
ஓட்டப்பிடாரம் அருகே மலைப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் என்பவா், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருந்தாா். இதனிடையே, விபத்தில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
அதையடுத்து, அவரது மனைவி சுப்புலெட்சுமி, வாரிசுதாரா்கள் முதிா்வுத் தொகை கோரி அந்நிறுவனத்திடம் விண்ணப்பித்தனா். ஆனால், அந்நிறுவனம் சரியான காரணங்களைக் கூறாமல் பணம் தர மறுத்தது.
இதுகுறித்து மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வழக்கை விசாரித்து, காப்பீடு தொகை ரூ. 2.50 லட்சம், சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ. 50 ஆயிரம், வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 3.05 லட்சத்தை செல்வராஜின் குடும்பத்தினருக்கு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டனா்.