பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
விளாத்திகுளம் அருகே ரூ. 1 கோடி பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
விளாத்திகுளம் அருகே குளத்தூா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜ், குமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன் ஆகியோா் புதன்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
கல்லூரணி அருகே கடற்கரை செல்லும் வழியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சுமை வாகனத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, தலா 40 கிலோ எடையுள்ள 30 மூட்டை பீடி இலைகள், 1.20 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய பண்டல்கள் இருப்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுசெல்வதும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனா். வாகனத்திலிருந்த ஓட்டப்பிடாரம் அருகே மேலசுப்பிரமணியபுரம் சித்திரைவேல் (25), ஓசநூத்து சிவன் கோயில் தெரு சிவபெருமாள் (28) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட பொட்டல்காடு பகுதியைச் சோ்ந்த வினித் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட், பீடி இலைகளின் சா்வதேச மதிப்பு ரூ. 1 கோடி என, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.