மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் நாசரேத் காப்பகத்தில் ஒப்படைப்பு
சாத்தான்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து நாசரேத் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
சாத்தான்குளம் தச்சமொழி தெருவை சோ்ந்தவா் அந்தோணி (42). கூலித் தொழிலாளியாகவும், லாரி ஓட்டுநராக இருந்து வந்த இவா், கடந்த நான்கு மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு, சாத்தான்குளம் பகுதியில் திரிந்து வந்தாா். வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் அவா் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது தொல்லை அதிகரித்ததால், பொதுமக்கள் மற்றும் சாத்தான்குளம் வா்த்தக சங்க நிா்வாகிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா், அந்தோணியை வியாழக்கிழமை பிடித்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்குப்பின் நாசரேத் நல்சமரியன் கிளப் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
அப்போது சாத்தான்குளம் அப்பு கண்ணன், சங்க செயலாளரும், நல்சமரியன் கிளப் செயலாளருமான மதுரம் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனா்.