செய்திகள் :

'விபத்தில் இறந்த மகன்... ரூ.400 கட்டாததால் ரூ.15 லட்சத்தை இழந்த குடும்பம்!'- வாகன காப்பீட்டில் கவனம்

post image

'என்னுடைய கிளைன்ட் மகன் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளைன்ட்டின் குடும்பம் இறந்த மகனை தான் அவர்களது வாழ்வாதாரத்திற்கு மிகவும் நம்பி இருந்திருக்கிறது. அந்த மகன் வேலைக்கு போய் சம்பாதித்து அவரது படிப்பிற்காக வாங்கிய கடனை அடைத்துவிடுவார் என்று கனவு கண்டுகொண்டிருந்த அந்த சமயத்தில் தான் விபத்து என்ற இடி வந்து அந்தக் குடும்பத்தில் இறங்கியுள்ளது.

இப்போது மகனும் இல்லாமலும், கடன் தொல்லையாலும் மிகவும் தத்தளித்து வருகிறது அந்தக் குடும்பம். 'மகன் சாலை விபத்தில் தான் இறந்தான்... வாகன இன்சூரன்ஸ் மூலம் எதாவது பணம் கிடைக்குமா?' என்று வந்த கிளைன்ட்டிற்கு, "அப்படி எந்தப் பணமும் உங்கள் மகனுக்கு கிடைக்காது" என்று கூறவே கஷ்டமாக இருந்தது. 'ஏன் எந்தப் பணமும் கிடைக்காது... அது தான் வாகன இன்சூரன்ஸ் இருக்கிறதே' என்று நீங்கள் நினைக்கலாம். வாகன இன்சூரன்ஸ் ரின்யூவலில் இவர்கள் செய்த சின்ன தவறு தான் பணம் கிடைக்காததற்கு காரணம்.

காப்பீட்டு ஆலோசகர் விஷ்ணு வர்தன்

அந்த சின்ன தவறு 'கம்பல்சரி பெர்சனல் ஆக்சிடென்ட் (சிபிஏ)' என்று கூறும் காப்பீட்டு ஆலோசகர் விஷ்ணு வர்தன் அதைப் பற்றி விளக்குகிறார்.

பொதுவாக, வாகன காப்பீடு எடுக்கும்போது, 'காசு கட்டிட்டோம்... எதாவது ஆச்சுனா காசு கிடைச்சுடும்' என்று அசால்டாக விட்டுவிடுகிறோம். ஆனால், வாகன காப்பீடு எடுப்பதாக இருந்தாலும் சரி... ரின்யூவல் செய்தாலும் சரி, அந்தக் காப்பீட்டு கவரேஜில் சி.பி.ஏ இருக்கிறதா என்பதை கட்டாயம் செக் செய்துகொள்ள வேண்டும்.

சி.பி.ஏ என்பது பைக் இன்சூரன்ஸில் மிக முக்கியமான ஒன்று. வாகனம் ஓட்டிச் செல்லும் நபருக்கு விபத்து நேரும் பட்சத்தில், அதில் அவருக்கு வாழ்நாள் குறைபாடு ஏற்பட்டாலோ அல்லது அவர் உயிரிழந்துவிட்டாலோ, இந்த சி.பி.ஏ அந்த நபரின் குடும்பத்திற்கு ஓடி வந்து உதவும். அதுவும் ஒரு லட்சம், இரண்டு லட்சமாக அல்ல... சி.பி.ஏ மூலம் ரூ.15 லட்சம் வரை பெறலாம்.

'இது' இருக்கானு கேளுங்க...

'ரூ.15 லட்சமா...' அப்போது பிரீமியம் தொகை அதிகம் இருக்கும் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் சி.பி.ஏ-வின் பிரீமியமாக ரூ.400 கட்டினால் போதும்.

காப்பீட்டிற்கு பணம் கட்டும்போது, ஒருமுறை அந்த ஆவணத்தை படித்து பார்த்து சி.பி.ஏ உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள் அல்லது காப்பீட்டு ஏஜென்ட்டிடம் கேளுங்கள்.

சி.பி.ஏ-வை பாராமல் விடும் நம் சின்ன கவன சிதறல்கூட, நம் குடும்பத்தின் எதிர்காலத்தை மாற்றலாம். அதனால், மிக கவனம் மக்களே...