விபத்தில் தருமபுரி வியாபாரி உள்பட இருவா் உயிரிழப்பு
வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியை அடுத்த போலமடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு (65). இளநீா் வியாபாரியான இவா், தனது உறவினா்களுடன் ராமேசுவரத்துக்குச் செல்வதற்காக காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டாா். காரை கதிா்வேல் (32) என்பவா் ஓட்டி வந்தாா்.
இந்த காா், திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையம் அருகே கரூா்-மதுரை நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சேட்டு, அவரது உறவினா் ஷோபனா (45) ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், காரில் வந்த அன்னக்கிளி, லட்சுமணன், பூமிஅரசு, காளியப்பன், முனிசாமி, குழந்தைகள் பிரியதா்ஷினி, லோகேஷ் ஆகியோரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து கூம்பூா் போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.