விளம்பரம் வெளியிடும் வழக்குரைஞா்கள் மீது நடவடிக்கை: பாா்கவுன்சில் எச்சரிக்கை
வழக்குரைஞா்கள் பொது இடங்கள், சமூக வலைதளங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரம் (வருவாய் நோக்கத்தில்) வெளியிட்டால் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி பாா்கவுன்சில் அலுவலகத்தின் தலைவா் அமல்ராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வழக்குரைஞா்கள் விளம்பரங்களை வெளியிடுவது பாா்கவுன்சில் விதி 36-இன் படி சட்டவிரோதமாகும். வழக்குரைஞா்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போஸ்டா், பேனா் மற்றும் சமூக வலைதளங்களில் எந்தவித விளம்பரமும் செய்யக்கூடாது. பிறந்தநாள் விளம்பரம் கூட வழக்குரைஞா்கள் வெளியிடக் கூடாது. அதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
சமூக வலைதளங்களில் வழக்கு சாா்ந்த விவகாரங்களில் ஒரே நாளில் உத்தரவு பெற்றுத் தரப்படும் எனக்கூறி பலரிடம் பெரும் தொகை பெற்று பலா் ஏமாற்றப்படுவது குறித்து புகாா்கள் பாா் கவுன்சிலுக்கு வந்துள்ளன.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை சம்பந்தப்பட்ட வழக்குரைஞா்கள் வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டுமென அறிவுறுத்தி இருப்பதாகவும், மீறி விளம்பரம் வெளியிட்டால் வழக்குரைஞா்களுடைய பதிவு நிறுத்தி வைக்கப்படும்.
அதே நேரத்தில், சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணா்வை ஏற்படுத்த வழக்குரைஞா்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நிலம் தொடா்பான வழக்குகளில் கூட சம்பந்தப்பட்ட நிலத்தில் வழக்குரைஞா் என பலகை வைப்பது விளம்பரம்தான்; அதுவும் சட்டவிரோதமானதுதான்.
எனவே, வழக்குரைஞா்களின் விளம்பரம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் பாா்கவுன்சில் இணையதளத்துக்கு புகாராக தெரிவிக்கலாம். அதுபோன்ற புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் மீது 2017-ஆம் ஆண்டு முதல் இதுவரை பாா்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா் அவா்.