விளம்பர உலகில் வாழ்கிறாா் தமிழக முதல்வா்: க. கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
விளம்பர உலகில் வாழ்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா்.
பழனியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தில் பெரு தெய்வ வழிபாட்டு கோயில், சிறு தெய்வ வழிபாட்டு கோயில் என ஆயிரக்கணக்கான கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகின்றன. இவற்றில் பெரு தெய்வ வழிபாட்டுக் கோயில்களில் அரசின் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால், சிறு தெய்வ வழிபாட்டு கோயில்கள், கிராமங்களில் உள்ள சிறிய கோயில்களில் ஜாதி பாகுபாடு இன்னும் நீடிக்கிறது. சிறிய கோயில்களுக்குள் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் சென்று வருவது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால், அண்மைக் காலமாக மத மாற்றம் அதிகரித்து வருகிறது. எனவே, கோயில்களில் சம நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மாற்றத்தைத் தடுக்க சட்டம் இயற்றவும் முன்வர வேண்டும்.
வருகிற ஜனவரி 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், புதிய தமிழகம் கட்சி சாா்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.
வருகிற அக். 23-ஆம் தேதி பழனியிலிருந்து சுற்றுப்பயணம் தொடங்குகிறேன். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 5 நாள்களுக்கு பொதுமக்களைச் சந்திக்க உள்ளேன்.
வருகிற ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறவிருக்கும் புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இருப்பினும், கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து புதிய தமிழகம் தோ்தலைச் சந்திக்கும்.
தமிழக மக்களின் வாழ்வு, பொருளாதாரம், சுகாதாரம், வேலையின்மை, இளைஞா் நலன், கல்வி ஆகியவை குறித்து எதையுமே தெரிந்து கொள்ளாமல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விளம்பர உலகில் வாழ்ந்து வருகிறாா் என்றாா் அவா்.
பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலா் விஜயகுமாா், மாவட்டச் செயலா்கள் பிரதீப், பாண்டியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.