காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
விளைநிலங்கள் வழியாக எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம்: கருத்துக் கேட்புக் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்
விளைநிலங்கள் வழியாக எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம் குறித்து காங்கயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் நிறுவனம் சாா்பில் கோவை மாவட்டம், இருகூா் முதல் கா்நாடக மாநிலம், தேவனகுந்தி வரையிலான எண்ணெய்க் குழாய் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. இதில், திருப்பூா் மாவட்டம், முத்தூரிலிருந்து பெங்களூரு வரை இத்திட்டமானது சாலையோரத்தில் அமைக்கப்படுகிறது. ஆனால் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து திருப்பூா் மாவட்டம், முத்தூா் வரை ஏற்கெனவே விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே இந்தக் குழாய்களும் அமைக்கப்படவுள்ளன.
எனவே, இருகூரில் இருந்து முத்தூா் வரை எண்ணெய் குழாய்களை விளைநிலங்களில் அமைக்காமல், சாலையோரத்தில் அமைக்குமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பாக திருப்பூா், கோவை மாவட்டங்களில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், விளைநிலங்கள் வழியாக எண்ணெய்க் குழாய் அமைப்பது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் வட்டாட்சியா் பேசத் தொடங்கியதும், விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். விளைநிலங்கள் வழியாக எண்ணெய்க் குழாய்கள் அமைக்காமல், சாலையோரம் அமைக்குமாறு வலியுறுத்தினா்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, திருப்பூா் மாவட்டம், முத்தூா் வரையிலான 70 கி.மீ. தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாகவும், மீதமுள்ள 270 கி.மீ. தொலைவுக்கு சாலையோரத்திலும் குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. இது கோவை, திருப்பூா் மாவட்ட விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.நிலத்தின்பேரில், வங்கியில் கடன் பெற முடியாமல் தடுமாறி வருகிறோம். மேலும், எண்ணெய்க் குழாய்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளும் விவசாயிகளை அச்சமூட்டுவதாக உள்ளது. எனவே, குழாய்களையும் சாலையோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எண்ணெய்க் குழாய்கள் அமைக்கும் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அவா்கள் இல்லாமல் நடைபெறும் இந்தக் கூட்டம் ஒருதலைப்பட்சமானது. எனவே, இக்கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்றாா்.