உடுமலையில் வகுப்பறையில் பள்ளி மாணவி உயிரிழப்பு
உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி வகுப்பறையில் வெள்ளக்கிழமை உயிரிழந்தாா்.
உடுமலை அருகே உள்ள அமராவதி நகரைச் சோ்ந்தவா் பழங்குடியின மாணவி புவனேஸ்வரி (17). இவா் பள்ளி அருகே உள்ள சமூகநீதி விடுதியில் தங்கி படித்து வந்தாா்.
இந்நிலையில் மாணவி தங்கி இருந்த அரசு சமூகநீதி விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுள்ளாா். பின்னா் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் அமா்ந்தபோது, திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து ஆசிரியா்கள் மாணவியை உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும்போது தனது தோழியிடம் நெஞ்சு வலிப்பதாக அந்த மாணவி கூறியுள்ளது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து உடுமலை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.