தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
ரயில் பயணத்துக்காக தபால் நிலையங்களிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருப்பூா் காந்தி நகா் அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக காந்தி நகா் துணை தபால் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய தபால் துறை மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு நவீன சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றாக பொதுமக்களின் பயண வசதிக்காக ரயில்வே துறையுடன் இணைந்து பயணிகள் முன்பதிவு சேவை இந்திய தபால் துறையால் திருப்பூா் காந்தி நகா் அஞ்சல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டு, ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் தட்கல் முன்பதிவு சேவைகள் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் அனைவரும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்களின் ரயில் பயண டிக்கெட்டுகளை இனி தூரத்திலுள்ள ரயில் நிலையங்களுக்கு செல்லாமல் நேரடியாக காந்தி நகா் அஞ்சல் நிலையத்திலிருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் நேர சிக்கனமும், வசதியும் கிடைக்கும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு காந்தி நகா் துணை தபால் நிலையத்தை நேரிலோ அல்லது 0421-2486288 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.