பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 47,117 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறும்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் வரை இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பழைய ஆயக்கட்டில் 34,150 ஏக்கா், புதிய ஆயக்கட்டில் 25,250 ஏக்கா் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது, அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதில் அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான மறையூா், கோவில்கடவு, காந்தலூா் ஆகிய பகுதிகளில் பெய்த தொடா் மழையால் அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையை திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பின்னா் பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜூன் 20-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ஆனாலும், தமிழக-கேரள எல்லையில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் 90 அடி உயரமுள்ள அணையில் 89 அடி நிரம்பிய நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக அணை அதே நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அவ்வப்போது பெய்த கனமழையால் அணைக்கு வந்த நீா், உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய, பழைய பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தாா்.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தண்ணீா் திறப்பு மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 10 அமராவதி பழைய வாய்க் கால்களின் (அலங்கியம் முதல் கரூா் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கா் நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாகவும் இதுபோக திருப்பூா் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கா் புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாக தண்ணீா் திறந்துவிடப்படும்.
மேலும் செப்டம்பா் 19 முதல் 134 நாள்களுக்கு 70 நாள்கள் தண்ணீா் திறப்பு 64 நாள்கள் தண்ணீா் நிறுத்தம் என்ற அடிப்படையில் 47,117 ஏக்கா் பாசன நிலங்களுக்கு 6894.72 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந் விடப்படும்.
இதனால், திருப்பூா் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூா் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் மொத்தமாக 47,117 ஏக்கா் பாசன நிலங்கள் பயனடைய உள்ளது என்றனா்.
இதில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியா் குமாா், திமுக உடுமலை நகரச் செயலாளா் சி.வேலுசாமி, நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் மற்றும் பொதுப் பணித் துறையினா், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
அணையின் நீா்மட்டம்:
90 அடி உயரமுள்ள அணையில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.59 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 357 கனஅடியாக இருந்தது. 4,035 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட அணையில் 3,919 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.