இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் வட்டம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த 20 குடும்பத்தினா் காங்கயத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து, போராட்டத்துக்கு தலைமை வகித்த ஆதித்தமிழா் ஜனநாயகப் பேரவையின் தலைவா் அ.சு.பெளத்தன் கூறியதாவது:
எல்லப்பாளையம் புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பத்தினா் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் வட்டாட்சியா், ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் ஆகிய அலுவலகங்களில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கோரிக்கை மனு அளித்து வந்தனா். இது தொடா்பாக காத்திருப்புப் போராட்டம், ஆா்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பூா் அருகே கொடுவாயில், மேற்கண்ட 20 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டது. இந்தப் பட்டா வழங்கப்பட்ட பின்னரும் பல மாதங்களாக பட்டாவுக்கு உரிய நிலத்தை அளந்து கொடுக்கப்படவில்லை. எனவே நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து, நில அளவீடு செய்யப்படவுள்ள நிலத்தைப் பாா்த்த 20 பட்டாதாரா்கள் அதிா்ச்சியடைந்தனா். அந்த நிலம் மண் மேடாக, வீடு கட்டி வசிப்பதற்கு தகுதியற்ற இடமாக இருந்தது. இதனால் அதிருப்தியடைந்த பயனாளிகள், வேறு இடத்தில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து 20 பேரின் அசல் பட்டாக்களை அதிகாரிகள் திரும்பப் பெற்றனா். அதன்பின் தற்போது வரை புதிய இடத்துக்கான பட்டா வழங்கப்படவில்லை. புதிய இடத்துக்கான பட்டா வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில் உள்ள ஆதிதிராவிட நலத் துறை தனிவட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.
இது குறித்து, ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் ஜெகஜோதி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கூறுகையில், 20 குடும்பங்களுக்கான பட்டாவும் தயாா் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியின்போது, அமைச்சா் தலைமையில் அவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் கலைந்து சென்றனா்.