விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த், புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று அந்தமானில் நடைபெற உள்ள சா்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
மேலும், கல்லூரியின் இரண்டாம் ஆண்டு தமிழ் துறை மாணவா் எஸ்.ஹரி, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்று கோப்பை வென்றுள்ளாா். இதேபோல நாமக்கல் மாவட்ட அளவிலான முதலல்வா் கோப்பைக்கான போட்டியில் கல்லூரி மாணவா்கள் சிலம்ப போட்டியிலும், நீச்சல் போட்டியிலும் சிறப்பிடம் பெற்றனா்.
ஆசிரியா்களுக்கான கேரம் விளையாட்டு போட்டியில் எஸ்.சுபத்ரா, பி.சுகந்தி ஆகியோா் இரண்டாம் இடமும் பெற்று சான்றிதழ்கள், பதக்கங்கள், ரொக்க பரிசுகளையும் பெற்றுள்ளனா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு கல்லூரி மாணவா்களை திருவள்ளுவா் அரசு கல்லூரியின் முதல்வா் ஏ.யூசுப்கான், கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவா் ஆா்.சிவக்குமாா், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஏ.வெண்ணிலா உள்ளிட்ட விளையாட்டுக் குழு ஆசிரியா்கள் பாராட்டினா்.
படம் உள்ளது - 4ஸ்போா்ட்ஸ்
படவிளக்கம்-
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்லூரி முதல்வா் ஏ.யூசூப்கான் உள்ளிட்ட பேராசிரியா்கள்.