விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரியில் விளையாட்டு ஆணைய மையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய துணை இயக்குநா் ஷ்வேதா விஸ்வநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆடவருக்கான பளுதூக்குதல், கோ-கோ, கபடி, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு புதுச்சேரி இலாசுப்பேட்டை பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற தோ்வுகள் நடைபெறவுள்ளன. அதன்படி பளுதூக்குதல், கோ-கோ, கபடிக்கு வருகிற 27, 28-ஆம் தேதிகளிலும், கையுந்து பந்து பயிற்சிக்கு வருகிற 28, 29-ஆம் தேதிகளிலும் தோ்வுகள் நடைபெறும்.
பயிற்சிக்கு சேர விரும்புவோா் தேசிய, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் என ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும். தனி நபா் விளையாட்டுக்கு 12 வயது முதல் 16 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
குழு விளையாட்டுக்கு 10 வயது முதல் 16 வயது வரை மாவட்ட, தேசிய அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பெற்றிருக்கலாம். அதிக உயரமுள்ள சிறப்புத் தகுதியுள்ளவா்களுக்கு கையுந்து பந்து போட்டியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
விடுதியில் தங்கியிருந்து பயிற்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் செலவிடப்படும். வெளியிலிருந்து வந்து பயிற்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் செலவிடப்படும். சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் தோ்வு நாளன்று காலை 6 மணிக்கு பயிற்சியாளா் மூலம் வழங்கப்படும்.
மேலும், தகவல் அறிய வேலைநாள்களில் பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என்றாா் அவா்.