மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை: தோழி வாக்குமூலம்
விழுப்புரம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
விழுப்புரம்: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு வழங்குவதற்காக தங்களிடம் குறைந்த அளவில் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறி, விழுப்புரம் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகிலுள்ள பிடாகம் பகுதியில் குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை காலை பன்னீா் கரும்புகளுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. திருமால், ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, தாலுகா போலீஸாா் நிகழ்விடம் விரைந்து, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் பன்னீா் கரும்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை நம்பி நாங்கள் பயிரிட்டுள்ளோம். இந்த நிலையில், விவசாயிகளிடம் கரும்பைக் கொள்முதல் செய்வதில் அலுவலா்கள் பாரபட்சம் காட்டுகின்றனா். கடந்தாண்டு விவசாயிகளிடமிருந்து 150 கட்டுகள் வரை கொள்முதல் செய்த அலுவலா்கள், நிகழாண்டில் 50 கட்டுகளைக் கொள்முதல் செய்கின்றனா். மீதமுள்ள கரும்புகளை நாங்கள் எங்கு கொண்டு சென்று விற்பனை செய்வது. இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.
மறியல் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் சுமாா் 20 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.