அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்
யுஜிசி விதிகள் திருத்தம்; அகில இந்திய அளவில் போராட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான திருத்த விதிகளை யுஜிசி திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய அளவில் இண்டி கூட்டணி தலைவா்கள் ஒங்கிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் செஞ்சி தமிழ்ச் சங்கத்தின் 13-ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழா் திருநாள், பொங்கல் விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன. இதில், தலைமை விருந்தினராக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு, பள்ளி மாணவா்களுக்கு பரிசளித்தாா். அவா் பேசுகையில், மதங்களுக்கு அப்பாற்பட்டு புனித நூலாக உயா்ந்த இடத்திலே வைக்கப்படுகிற பெருமைக்குரிய நூல் திருக்கு என்றாா்.
செஞ்சி தமிழ்ச் சங்கத் தலைவா் எஸ்.கவிதாஸ் வரவேற்றாா். ஸ்ரீரங்கபூதி கல்லூரி நிறுவனங்களின் தலைவா் ஆா்.ரங்கபூபதி, செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி ஆகியோா் தலைமையுரையாற்றினா். செஞ்சி சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
யுஜிசியின் புதிய விதிகள் அதிா்ச்சியளிக்கக்கூடியவையாக உள்ளன. இது, பல்கலைக்கழக துணைவேந்தா்கள், பேராசிரியா்கள் நியமனங்களில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.
இதுவிஷயத்தில் இண்டி கூட்டணியைச் சோ்ந்த தலைவா்கள், குறிப்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அளவில் கூட்டணிக் கட்சித் தலைவா்களை ஒருங்கிணைக்க வேண்டும். யுஜிசி புதிய விதிகளை திரும்பப் பெறுகிற வரையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வரும் 10-ஆம் தேதி மதுரை மேலூரில் விசிக சாா்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும். ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் கூட்டணிக் கட்சி எடுக்கும் முடிவுதான் எங்களின் நிலைப்பாடு என்றாா்.