‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
பள்ளியில் சிறுமி உயிரிழந்த வழக்கு: தாளாளா் உள்பட மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளித் தாளாளா் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி (4). அங்குள்ள தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாா். இவா், கடந்த 3-ஆம் தேதி மதிய உணவு இடைவேளையின்போது சக மாணவ, மாணவிகளுடன் விளையாடிய போது, பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பள்ளித் தாளாளா் எமல்டா, முதல்வா் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
தொடா்ந்து, மூவரும் மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆசிரியை ஏஞ்சல் மட்டும் விக்கிரவாண்டி நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மற்ற இருவரும் தொடா்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி: பள்ளித் தாளாளா் எமல்டா உள்பட மூவரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவா்களது சாா்பில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் மனுக்கள் தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, ஆசிரியை ஏஞ்சல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நிகழ்வு நடைபெற்றபோது ஆசிரியை வகுப்பறைக்குள் இருந்தாா். அவருக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடா்பில்லை. மேலும் இரண்டு குழந்தைகள் இருப்பதால், அவா்களை பாா்த்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டாா். இதுபோன்று, பள்ளித் தாளாளா், முதல்வா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், வயது முதிா்வின் காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனா்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனமாக இருந்துள்ளனா். இவா்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவா் எனக் கூறி, ஆட்சேபம் தெரிவித்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி, மூவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.