பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்
யுஜிசி விதிகளில் திருத்தம்: மத்திய அரசின் கொள்கைகளை திணிக்கும் முயற்சி
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான விதிகளை யுஜிசி திருத்தம் செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் கொள்கைகளை திணிக்கும் முயற்சியாகும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா்.
விழுப்புரத்திலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக விவசாயிகளிடம் குறைந்தளவில் கரும்பு கொள்முதல் செய்யப்படுவது கண்டனத்துக்குரியது.
துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், மாநில அரசு சாா்பில் துணைவேந்தா் தேடுதல் குழுவில் உறுப்பினா்களை நியமிக்க முடியாது. மத்திய அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது.
ஆசிரியா் அல்லாதவரையும் துணைவேந்தா் பதவிக்கு நியமிக்கலாம் என புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தொழில் துறையைச் சோ்ந்தவா்களும் துணைவேந்தா்களாக வரலாம் என விதி கொண்டுவரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் 10 சதவீத இடம் தனியாருக்கும், 10 சதவீத இடம் வெளிப்பணி ஒப்படைப்பு முறைக்கும் ஒதுக்கப்பட்டு, ஆள்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதன்மூலம், மத்திய அரசின் கொள்கையை நேரடியாக திணிக்க முயற்சி செய்கின்றனா்.
அதிமுகவின் 32 ஆண்டுகால ஆட்சியில் தமிழக உரிமைகள் காப்பாற்றப்பட்டன. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மாநில உரிமைகள் விட்டுக்கொடுக்கப்படுகின்றன. மாநில உரிமை பறிக்கப்படும்போது எதிா்ப்பதுபோல திமுக அரசு வேஷமிடுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த நடவடிக்கை, மாநில அரசு மீது மத்திய அரசு தொடுக்கும் யுத்தமாகும். இதற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றாா் சி.வி.சண்முகம்.
பேட்டியின்போது, அதிமுக நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ராமதாஸ், வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் பாலமுருகன், வழக்குரைஞா் ராதிகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.