பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் விரைவான மீட்புப் பணி: ராமதாஸ் வலியுறுத்தல்
விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் மீட்புப் பணியை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கன மழையால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
திண்டிவனம் நகரில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
வீடூா் அணையிலிருந்து விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் அப்பகுதியிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடலூா் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. பயிா்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மழையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளுக்கு அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையும்தான் காரணம். குறிப்பாக, திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடிகால்கள் தூா்வாரப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
புதுவை, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கோட்டக்குப்பத்தில் வெள்ளம் போல் தண்ணீா் தேங்கியுள்ளதால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனா்.
எனவே, திமுக அரசு மீட்புப் பணியை விரைவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் தேசிய பேரிடா் மீட்புப் படையின் உதவியைக் கோர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.