சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்சென்ஸ் 157; நிஃப்டி 78 புள்ளிகள் சரிவு!
விழுப்புரம் ராமலிங்க சுவாமி மடத்தில் தைப்பூச ஜோதி தரிசனம்
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள ராமலிங்க சுவாமி மடத்தில் (சத்திரம்) 154-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏழு திரைகளை நீக்கி காட்டப்பட்ட ஜோதி தரிசனத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தைப்பூசத்தையொட்டி, ராமலிங்க சுவாமி மடத்தில் காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, வள்ளலாா் தொண்டா்களின்அகவல் பாராயணம் காலை 8 மணி வரை நடைபெற்றது. பின்னா், காலை 8.10 மணிக்கு சன்மாா்க்க சங்கக் கொடியை ஏ.பி.நீலமேகவா்ணன் ஏற்றி வைத்தாா்.
ஜோதி தரிசன நிகழ்வில் பங்கேற்ற வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, பின்னா் பக்தா்களுக்கு காலை உணவு வழங்குதலையும் தொடங்கிவைத்தாா். மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பக்தா்களுக்கு காலை உணவை வழங்கினாா்.
நிகழ்வில் விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன், மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகரச் செயலா் இரா.சக்கரை, ஒன்றியச் செயலா் கல்பட்டு வி.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, விழுப்புரம் சமரச சுத்த சன்மாா்க்க சத்தியச் சங்கத் தலைவா் ப.உதயகுமாா் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். இதையடுத்து, வள்ளலாா் திருத்தோ் வீதியுலா வருதல் நடைபெற்றது. பிற்பகல் ஒரு மணிக்கு அருட்பா பாடல்களை மு.ச.இளங்கோ வழங்கினாா்.
ஏழு திரைகள் நீக்கி...: காலை 6, 10, பிற்பகல் 1, இரவு 7, 10 மற்றும் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு என 6 கால ஜோதி தரிசனம் 7 திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
நிகழ்வுகளில் நகா்மன்ற உறுப்பினா்கள் வசந்தா அன்பரசு, வி.புருஷோத்தமன், மெரினா சரவணன், முன்னாள் உறுப்பினா் பா.ஸ்ரீவினோத், பி.ஸ்ரீதா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆய்வாளா் மா.சு.லட்சுமி, செயல் அலுவலா் இரா.ராமலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.