உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
விவசாயிகள் பேரணி: ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000-ஆக உயா்த்த வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், காத்திருப்புப் பட்டியலில் உள்ள வேளாண் மின் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும், பயிா்க் காப்பீட்டில் வெளிப்படைத்தன்மை வேண்டும், தலைஞாயிறு என்பிகேஆா்ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும், மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு கால்நடை பட்டி அமைக்க வேண்டும், கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 2,000 சிப்பம் நெல் கொள்முதல் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் தருமபுரம் பகுதியில் இருந்து விவசாயிகள் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் கோவி. பண்டரிநாதன், மாவட்ட செயலாளா் க.கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளா்கள் கும்கி.ராஜேந்திரன், மாந்தை பாபு, என்.கணேசன், அருட்செல்வன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவா் ஆா்.அன்பழகன், இயற்கை விவசாயி அ.ராமலிங்கம், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் முருகன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.