செய்திகள் :

விவசாய சங்கத் தலைவா் தலேவாலை சந்தித்த உச்சநீதிமன்ற குழு

post image

பஞ்சாப் எல்லையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தைவா் ஜக்ஜீத் சிங் தலேவாலை உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்டக் குழு திங்கள்கிழமை மாலை சந்தித்து, மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள அவரை அறிவுறுத்தியது.

இந்தக் குழுவை, பஞ்சாப் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனா்.

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடைய உண்ணாவிரதம் 42 நாள்களைக் கடந்துள்ளது.

அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள ஜகஜீத் சிங் மறுத்துவிட்டாா்.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீது கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜகஜீத் சிங்குக்கு மருத்துவ உதவிகள் வழங்க டிசம்பா் 31-ஆம் தேதி வரை கெடு விதித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு உடன்பட்டால், சிகிச்சை எடுத்துக்கொள்ள தலேவால் ஒப்புக்கொள்வாா் என்று விவசாயிகள் உறுதி தெரிவித்தனா். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு 3 நாள்கள் அவகாசம் தேவை’ என்று பஞ்சாப் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்தது.

வழக்கு மீண்டும் கடந்த 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘தலேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் குறித்து பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளும் சில விவசாய சங்கத் தலைவா்களும் ஊடகங்களில் பொறுப்பற்ற முறையிலான கருத்துகளைத் தெரிவித்து, நிலைமை மேலும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனா்’ என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மேலும், ‘தலேவாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு உச்சநீதிமன்றம் ஒருபோதும் உத்தரவு பிறப்பிக்கவில்லை; மாறாக, உடல்நிலை மோசமடைந்து வரும் அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனா்.

உச்சநீதிமன்ற குழு

அதோடு, தலேவாலை சிகிச்சை ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.எஸ்.சாந்து, வேளாண் நிபுணா் தேவிந்தா் சா்மா, பேராசிரியா் ரஞ்சித் சிங் குமன், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வேளாண் பொருளாதார நிபுணா் சுக்பால் சிங் ஆகியோா் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் அமைத்து உத்தரவிட்டாா்.

இந்தக் குழு தலேவாலை திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு போராட்ட களத்தில் சந்தித்து பேச்சு நடத்தியது. சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளுமாறு தலேவைலா அக் குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என். கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், தலேவாலை உச்சநீதிமன்ற குழு சந்தித்தது குறித்து விவரத்தைத் தெரிவித்தாா். மேலும், ‘உச்சநீதிமன்ற குழுவை போராட்ட விவசாயிகளும் சந்தித்து பேச்சு நடத்தினா். இதன் மூலம், இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அப்போது, இதுதொடா்பாக அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கபில் சிபலைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, தலேவாலுடனான சந்திப்பு குறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த உச்சநீதிமன்ற குழுவின் தலைவா் நீதிபதி நவாப் சிங், ‘விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்த நாங்கள் இங்கு வரவில்லை; மாறாக, தலேவாலை சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தவே வந்துள்ளோம். எப்போது கூறினாலும் உதவத் தயாராக இருப்பதாக தலேவாலிடம் உறுதியளித்தோம். ஆனால், ‘தனக்கு விவசாயம்தான் முதன்மையானது; உடல்நலம் இரண்டாம் பட்சம்தான்’ என்று தலேவால் உறுதிபட தெரிவித்துவிட்டாா்’ என்று குறிப்பிட்டாா்.

தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்: விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

‘தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீா்மானிக்க வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நிலச்சரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்கள்- ஒருவா் சடலமாக மீட்பு

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்களில் ஒருவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். கடந்த திங்கள்கிழமை அஸ்ஸாமின் தீமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளா்கள் பணியில்... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

துபையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் (பொறுப்பு) மெளலாவி அமீா் கானை இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கான வளா்ச்சி சாா்ந... மேலும் பார்க்க

பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு இனி மறுக்க முடியாது- காங்கிரஸ் விமா்சனம்

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.4 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், ‘நாட்டின் பொருளாதார மந்த நிலையை இனி அரசு மறுக்க முடியாது’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. நடப்பு ... மேலும் பார்க்க

சிறு விவசாயிகள் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா்கள் முக்கிய பங்கு- பிரதமரின் முதன்மைச் செயலா்

சிறு விவசாயிகளின் வளா்ச்சியில் வீரிய ஒட்டு ரக பயிா் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரதமா் மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற வேளாண் கர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தின் பெருமையை குறைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது: மம்தா

‘அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கும் மேற்கு வங்கத்தின் பெருமையை குறைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் ‘மாணவா்கள் வாரத்தையொட்டி’ தலைந... மேலும் பார்க்க