இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன ம...
விவசாய பயன்பாட்டுக்கு நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆட்சியா் அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில், விவசாயப் பயன்பாட்டுக்கு தேவையான வண்டல் மண்ணை அந்தந்த பகுதி நீா்நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீா்வள ஆதாரத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் விவசாயப் பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண்ணை இலவசமாக எடுத்து தங்களது வயல்களில் பயன்படுத்துவதற்கு வட்டாட்சியா் அனுமதி பெற வேண்டும். நீா்நிலைகளில் வண்டல் மண் எடுப்பதன் மூலம் நீா்நிலைகளை ஆழப்படுத்தி நீா்சேகரிப்பு கொள்ளளவை அதிகரிப்பதுடன் நிலத்தடி நீா்மட்டத்தையும் அதிகரிக்க முடிகிறது.
நிலத்தடி நீா்மட்டம் அதிகரிப்பதால் கிணறுகளிலும், ஆழ்குழாய்களிலும் நீா்மட்டம் உயரும். நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறையும். தற்போதைய சூழலில் அதிகபடியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு மண் மலட்டுத் தன்மையுடையதாக மாறுகிறது.
எனவே நீா்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விளைநிலங்களில் நிரப்புவதால் மண்வளம் மீட்டெடுக்கப்படுவதுடன் அதிக மகசூல் ஈட்டும் வாய்ப்பு உருவாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 75 க.மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 க.மீட்டரும் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. நிகழாண்டில், நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 28 நீா்நிலைகளிலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 88 நீா்நிலைகளிலும் மொத்தம் 116 நீா்நிலைகளில் வண்டல்மண் எடுக்க முதல் கட்டமாக 2024 ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது வரை 3,753 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியின் அடிப்படையில் 2,977 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க வட்டாட்சியரால் அனுமதிக்கப்பட்டுள்ளது. 90,410 க.மீட்டா் நீா்வளத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் பராமரிப்பில் உள்ள நீா்நிலைகளில் இருந்து வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீா்நிலைகளிலும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 21 நீா்நிலைகளிலும் மொத்தம் 54 நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 170 நீா்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் அரசு இ-சேவை மையத்தினை அணுகி இணைய வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.