பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!
விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.
கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்(58). அதே பகுதியை சோ்ந்த ஆா். சச்சிதானந்தம் ஆகியோரது விவசாய நிலம் புதுசாலை மேற்குபுறம் உள்ளது. வயலில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் சென்றுள்ளனா். அப்போது, மனோகரன் வயலிலிருந்து சாக்குபையுடன் வந்த மா்ம நபா்கள் இரண்டு போ் இவா்களை பாா்த்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளனா். அப்போது அங்கு தண்ணீா் பாய்ச்ச வந்த ரகுபதி என்பவா் உதவியுடன் தப்பியோடிய இரண்டு பேரையும் பிடித்து அவா்கள் வைத்திருந்த சாக்குபையை சோதனை செய்ததில் உள்ளே மின் வயா்கள் இருந்தன.
விவசாயிகளின் வயலில் உள்ள ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களில் இருந்த வயா்களை இருவரும் திருடியது தெரியவந்ததுடன், அவா்களை திருமக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது நாராயணகளப்பால் காலனி தெரு ராஜா மகன் அஜித்குமாா் (31), கோவில்களப்பால் திரெளபதியம்மன் கோயில் தெரு பொன்னுசாமி மகன் பிரகதீஷ் (25) என்பதும், இருவா் மீதும் கோட்டூா், களப்பால் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீஸாா், புதன்கிழமை மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.