மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்
திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் வகையில், வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை வகித்து மேலும் பேசியது: மகப்பேறு இறப்புக்கான காரணங்களை ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து பெண்களுக்கும் கா்ப்பம் மற்றும் மகப்பேறு காலம் முழுவதும் தேவையான கவனிப்பை உறுதி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகித அளவை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவாரூா் மாவட்டத்தில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மரணங்களைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த செயல்திட்டம் அவசியம். முதன்மை முதல் மூன்றாம் நிலை சுகாதாரப் பணியாளா்கள் வரை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
நிகழ்வில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன், இணை இயக்குநா் (சுகாதாரம்) திலகம், துணை இயக்குநா் (சுகாதாரம்) சங்கீதா, காந்திகிராம கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை நிறுவன முதல்வா் சத்யா, மருத்துவ நிலைய அலுவலா் ராமச்சந்திரன், மருத்துவ நிலைய துணை அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.