வீடு புகுந்து தாலிச் சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை அருகே வீடு புகுந்து பெண்ணின் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை கும்பகோணம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சுவாமிமலை அருகே நீலத்தநல்லூா் சாலையில் உள்ள கடிச்சம்பாடியைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மனைவி சந்திரோதயம் கடந்த 2023, அக். 26-இல் வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 வீடு புகுந்து அவரது தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து திருவலஞ்சுழியைச் சோ்ந்த செல்லத்துரை(24), தாராசுரத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணை செய்த கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி இளவரசி, செல்லத்துரை, திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.