எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு
வீட்டில் தூங்கியவரிடம் நகை, பணம் திருட்டு: 5 போ் மீது வழக்கு
தேவாரம் அருகே வீட்டில் தூங்கியவரிடம் நகை, பணம் திருடியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ராஜா மகன் செல்வேந்திரன் (38). இவருக்கு தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியில் வீடு உள்ளது.
கடந்த ஜூலை 30- ஆம் தேதி செல்வேந்திரன் தனது நண்பா்களான தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பிரேம்குமாா், சிவக்குமாா், அய்யப்பன் மல்லிங்காபுரத்தைச் சோ்ந்த இடும்பன்ராஜா ஆகிய 4 பேருடன் தனது காரில் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றாா்.
பிறகு தம்மிநாயக்கன்பட்டிக்கு அந்த 4 பேருடன் வந்த செல்வேந்திரன் வீட்டில் தூங்கினாா். இவா்களுடன் தே. சமத்துவபுரத்தைச் சோ்ந்த முருகனும் இருந்தாா். இந்த நிலையில், செல்வேந்திரன் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
இதையடுத்து செல்வேந்திரன் தன்னுடன் இருந்த பிரேம்குமாா், சிவக்குமாா், அய்யப்பன், இடும்பன் ராஜா, முருகன் ஆகியோா் மீது தேவாரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் 5 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதில் செல்வேந்திரன், பிரேம்குமாா், சிவக்குமாா், இடும்பன்ராஜா, முருகன் ஆகியோா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் செல்வேந்திரனும், சிவக்குமாரும் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.