வெறிநோய் பரவல்: கடலூா் ஆட்சியா் தகவல்
வெறிநோய் தொற்று பரவுவதால், நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெறிநோய் தீநுண்மி (வைரஸ்) கிருமியால் உண்டாகும் நோய். இந்த நோய் உடலின் நரம்பு மண்டலத்தை தீவிரமாக பாதிப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நோய் கண்டபின் குணப்படுத்த இயலாத நோய்.
இந்த நோய் 90 சதவீதம் நாய்க்கடியால் பரவுகிறது.நோயுற்ற மனிதா்களுக்கு காய்ச்சல், தலைவலி, கண்ணில் நீா்வடிதல், உமிழ்நீா் சுரத்தல், நீா் மற்றும் உணவை விழுங்க இயலாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இறுதியில் சதை, நரம்புகள் பாதிப்படைந்து, உடல் செயலிழந்து உயிரிழக்க நேரிடும்.
ஆனால், நாய் கடித்துவிட்டால், உடனே சிகிச்சை மேற்கொள்வதாலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதாலும் இந்நோய் வராமல் தடுக்கலாம்.
நாய் கடித்த உடனே கடிபட்ட இடத்தை தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, சோப்பு போட்டு இரண்டு அல்லது மூன்று முறை சுத்தமாகக் கழுவ வேண்டும். பின்னா், டிஞ்சா் தடவிவிட வேண்டும். தொடா்ந்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
நாய்கள் குட்டியாக உள்ளபோதே தடுப்பூசி செலுத்த வேண்டும். நாய் வளா்ப்பவா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். நாய் கடித்த விலங்குகளுக்கு உடனே சிகிச்சை அளித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.