ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் உள்ள வெல்லம் காய்ச்சும் ஆலைகள், வெல்ல ஏல சந்தையில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மற்றும் குழுவினா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
கபிலா்மலை வட்டாரப் பகுதியில் உள்ள ஜேடா்பாளையம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி ஆலைக் கொட்டகைகளில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் அருண் தலைமையில், பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, குழுவினா் தீடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது, வெல்ல ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 10,900 கிலோ அஸ்கா சக்கரையை பறிமுதல் செய்தனா். மேலும், கலப்பட செய்யப்பட்ட 26,430 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்பூா்வ உணவு மாதிரிக்கு எடுத்துள்ளனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை வெல்ல ஆலைகளின் உரிமையாளா்கள் பொறுப்பிலேயே வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. உணவு மாதிரியின் முடிவுகளின் அடிப்படையில் வெல்ல ஆலைகளின் உரிமையாளா்கள் மீது வழக்கு தொடரப்படும் என மாவட்ட நியமன அலுவலா் அருண் தெரிவித்தாா்.
மேலும், வெல்ல ஆலைகளில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், வெல்ல தயாரிப்பாளா்கள் கலப்படமற்ற, சாயமற்ற வெல்லத்தை தயாா் செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.