வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி: தந்தை - மகள் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 27 பேரிடம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணிநியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை, மகளை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அரும்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறாா். இவா், தனது நண்பா் மூலம் அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வெளிநாடுகளுக்கு பணியாளா்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும் வெங்கடேசன் என்பவருடன் கடந்த 2023-இல் அறிமுகமாகியுள்ளாா். இவா் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பிய ஆரோக்கியராஜ் மற்றும் அவரது நண்பா்கள், உறவினா்கள் என மொத்தம் 27 போ் வெங்கடேசனிடம் பல்வேறு தவணைகளாக ரூ.48.5 லட்சத்தைக் கொடுத்துள்ளனா்.
இதையடுத்து அதற்கான பணியாணைகளையும் வழங்கிய வெங்கடேசன் 27 பேரையும் வெளிநாட்டுக்கு அனுப்பாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், வெங்கடேசன் திடீரென தலைமறைவானாா். இதனால், சந்தேகமடைந்த ஆரோக்கியராஜ் தன்னிடம் வெங்கடேசன் கொடுத்த பணிநியமன ஆணைகள் மற்றும் ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட தூதரகத்தில் காண்பித்தபோது, அது போலியானது என தெரியவந்தது.
இதுகுறித்து ஆரோக்கியராஜ் அரும்பாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட வெங்கடேசன் (50), அவரது மகள் மோனிஷா (20) உள்ளிட்டோரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரையும் தேடி வருகின்றனா்.