INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு
தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளா்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்களின் எண்ணிக்கையே அதிகமாகும். கட்டுமானத் தொழிலாளா்கள் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் உறுப்பினா்களாக இணைவோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வாரியத்தின் சாா்பில், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் குறித்து களஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்படாதவா்களின் எண்ணிக்கை விவரங்கள், வெளி மாநிலத் தொழிலாளா்களின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் களஆய்வின்போது சேகரிக்கப்படவுள்ளன.
இந்த ஆய்வை நடத்துவதற்காக தகுதி வாய்ந்த நிறுவனம் தோ்வு செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் செயலா் கோரியுள்ளாா். இணையதளம் வழியாக ஒப்பந்தப்புள்ளியை அளிப்பதற்கு செப். 17-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.