World Breast Feeding Week: சீம்பால் முதல் தாய்ப்பால் அருந்துகையில் குழந்தையின் ம...
வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே
இந்தியா மீதான கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது வெளியுறவு கொள்கையின் பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்டதால், இந்தியாவுக்கு 25 சதவிகிதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
இதனிடையே, ரஷியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவிக்காததால் ஆத்திரமடைந்த டிரம்ப், அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”7 ஆவது கடற்படை அச்சுறுத்தல் முதல் அணுசக்தி சோதனைக்கான தடைகள் வரை, அமெரிக்காவுடனான எங்கள் உறவை சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.
இருநாட்டு உறவுக்கு பேரழிவு தரும் வகையில், டிரம்ப்பின் 50 சதவிகிதம் வரி நடவடிக்கை உள்ளது.
1. இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக கூறியபோது நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். குறைந்தது 30 முறை டிரம்ப் கூறிவிட்டார். தொடர்கிறார்.
2. நவம்பர் 30, 2024 அன்றே பிரிக்ஸ் நாடுகள் மீது 100% வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டினார். அப்போது, மோடி அங்கே அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து, பிரிக்ஸ் அழிந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
3. டிரம்ப் பல மாதங்களாக பரஸ்பர வரி விதிப்பை திட்டமிட்டு வருகிறார். விவசாயம், சிறுகுறு தொழில்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்க மத்திய பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை.
4. மத்திய அமைச்சர்கள் பல மாதங்களாக அமெரிக்காவில் முகாமிட்டு வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசி வருகிறார்கள்.
5. 6 மாத கால அவகாசம் இருந்தது, ஆனால், வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த தவறிவிட்டீர்கள். இப்போது டிரம்ப் அச்சுறுத்துகிறார், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.
கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ. 7.51 லட்சம் கோடிக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 50 சதவிகிதம் வரி என்றால், ரூ. 3.75 லட்சம் கோடி பொருளாதார சுமை ஏற்படும்.
சிறுகுறு தொழில், விவசாயம், பால் பொருள்கள், மின்னணு பொருள்கள், நகைகள், ஆடை தொழில்கள் மிகவும் பாதிக்கப்படும். மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது எனத் தெரியவில்லை.
இந்த வெளியுறவுக் கொள்கை பேரழிவுக்கு 70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீது பழி சுமத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.