வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் ரூ.92.54 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த 337 பயனாளிகளுக்கு ரூ. 92.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.
தாராபுரம் சாலை தண்ணீா்பந்தலில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் வருவாய்த் துறை சாா்பில் 59 பயனாளிகளுக்கு ரூ.26.04 லட்சம் மதிப்பீட்டில் (நத்தம்) இலவச வீட்டுமனை பட்டாக்கள், 121 பயனாளிகளுக்கு (ஆதிதிராவிடா் நத்தம்) இ - பட்டாக்கள், 125 பேருக்கு நத்தம் தூய சிட்டாக்கள், 13 பேருக்கு குடும்ப அட்டைகள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 19 பேருக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீலான கலைஞா் கனவு இல்ல திட்ட ஆணைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருக்கோயில் நிதியிலிருந்து ரூ. 67.30 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்புச் சுவா் அமைக்கும் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
இதில், காங்கயம் வட்டாட்சியா் மோகனன், வீரக்குமார சுவாமி கோயில் செயல் அலுவலா் வனராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.