TVK: ``மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது'' - விஜய் சுற்றுப்பயணம் குற...
மிசோரமில் புதிய ரயில் பாதை: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
மிசோரமில் பைராபி-சாய்ரங் அகல ரயில் பாதையையும், ஐஸ்வால் மற்றும் தில்லி இடையேயான முதல் ராஜ்தானிஎக்ஸ்பிரஸ் மற்றும் பிற புதிய ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பிரதமரான பிறகு வடகிழக்கு மாநிலத்திற்கு மோடி மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். முன்னதாக 2017 டிசம்பரில் மோடி மிசோரத்துக்கு வருகை தந்தார். அப்போது அவர் அஸ்ஸாம் எல்லைக்கு அருகிலுள்ள வடக்கு மிசோராமின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள சாய்பம் கிராமத்திற்கு அருகில் 60 மெகாவாட் துரியல் நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
புதிய ரயில் பாதையைத் திறந்துவைப்பதற்காக பிரதமர் சனிக்கிழமை காலை 9 மணிக்கு லெங்புய் விமான நிலையத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவர் ஹெலிகாப்டரில் ஐஸ்வாலின் துவாம்புய் ஹெலிபேடிற்குச் செல்வார் என்று அதிகாரி கூறினார்.
காலை 10 மணிக்கு ஐஸ்வாலின் லம்முவாலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுவார், அப்போது அவர் பைராபி-சாய்ரங் ரயில் பாதையைத் தொடங்கி வைப்பார். மேலும் ஐஸ்வால் மற்றும் தில்லி இடையேயான ராஜ்தானி ரயில் சேவையையும், ஐஸ்வால்-கொல்கத்தா மற்றும் ஐஸ்வால்-குவஹாத்தி இடையேயான இரண்டு புதிய ரயில்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் என்று அதிகாரி கூறினார்.
பிரதமர் தனது பயணத்தின்போது இரண்டு கல்வி நிறுவனங்களையும் திறந்துவைப்பார் மற்றும் மத்திய அரசின் ஆறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். மிசோரமில் இருந்து, பிரதமர் மணிப்பூருக்கு விமானத்தில் செல்வார், மே 2023 இல் இன வன்முறை வெடித்ததிலிருந்து அவர் மேற்கொள்ளும் முதல் பயணம், இதுவாகும். பிரதமரின் வருகையை முன்னிட்டு மிசோரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மிசோரம் காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் பிரிவுகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன, மேலும் மாநில தலைநகர் ஐஸ்வாலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் ஐஸ்வால் வருகையின்போது சட்டம் ஒழுங்கை பராமரிக்க மாநில காவல்துறையைத் தவிர, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை நிறுத்தப்பட்டிருந்தன என்று அவர் கூறினார்.
2008-2009 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இந்தத் திட்டம் ரூ.8,213.72 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்குப் பிரதமர் மோடி 2014 இல் அடிக்கல் நாட்டினார். மேலும் இதன் கட்டுமானம் 2015 முதல் தொடங்கி 10 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்தது.
புதிய ரயில் பாதை ஜஸ்வாலை அஸ்ஸாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும். மிசோரத்தை நாட்டின் ரயில்வே வரைபடத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கும். இந்த ரயில் பாதையில் 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள் மற்றும் 48 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில் பாதையில் அமைந்துள்ள பாலங்களில் 114 மீட்டர் உயரமுள்ள சாய்ரங் பாலம் நாட்டில் இரண்டாவது உயரமான பாலமான கூறப்படுகிறது.